காட்டாங்குளத்தூர், 06 ஜனவரி 2026:
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SRMIST), நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்” உருவானதின் 150-வது ஆண்டை கொண்டாடும் வகையில், இன்று ஒரு பிரம்மாண்டமான உலக சாதனை முயற்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. மாண்புமிகு பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்கவும், இப்பல்கலையின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இந்த உலக சாதனை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த உலக சாதனை முயற்சியில், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என மொத்தம் 3,032 பேர் ஒன்றிணைந்து, “வந்தே மாதரம்” (VANDE MATARAM) என்ற சொற்றொடரின் எழுத்துகளை மாபெரும் மனித உருவ அமைப்பின் மூலம் வடிவமைத்தனர். நாட்டின் ஒற்றுமையும் தேசிய அடையாளமும் வெளிப்படும் வகையில், பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடியில் இடம்பெறும் மூன்று வண்ணங்களிலான ஆடைகளை அணிந்திருந்தனர். இந்த உலக சாதனை முயற்சி ‘World Record Union’ அமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டு, அதற்கான சாதனைச் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய SRMIST-ன் பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி, “இந்த உலக சாதனை முயற்சி SRMIST சமூகத்தின் கூட்டு முயற்சியையும், ஒற்றுமை உணர்வையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது. வந்தே மாதரம் பாடல் வெளிவந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், மானுடப் பங்கேற்பின் மூலம் அதன் சொற்றொடரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்திருப்பது, ஒழுக்கக் கட்டுப்பாடு, ஈடுபாடு மற்றும் கூட்டுப் பொறுப்பை வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்.
SRMIST தமிழ்ப் பேராயத்தின் தலைவர் டாக்டர் கரு. நாகராசன் கூறுகையில், “வந்தே மாதரம் பாடல் நம் இந்திய நாட்டின் கலாச்சார மற்றும் மொழிசார்ந்த பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சியின் மூலம், தேசபக்தி பாடலான இதன் 150 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பை நாம் கௌரவிக்கிறோம். ஆயிரக்கணக்கான நபர்களின் ஒருமித்த பங்கேற்பின் வழியாக, இப்பாடல் மீது கொண்டிருக்கும் மரியாதையும் பற்றும் வெளிப்படுகிறது,” என்றார்.
வந்தே மாதரம் பாடலின் இந்த முக்கிய மைல்கல் நிகழ்வை கொண்டாடுவதன் மூலம், மாணவர்களிடையே தேசபக்தியையும் சமூக ஈடுபாட்டையும் வளர்ப்பதில் தனது உறுதியை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


More Stories
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management