சென்னை, ஏப். 19–
‘‘நிலவில் மனிதன் வீடுகட்டி தங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை; அது விரைவிலேயே நடக்கும்,’’ என, இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
‘கட்டுமானத் தொழில்’ மாத இதழ் மற்றும் ‘கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் அகாடமி’ சார்பில், கட்டுமானத் தொழில் சாதனை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடந்தது. அதில், கட்டுமானத்துறையில் புதுமை புரிந்த மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு, இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.
அவர் பேசியதாவது:
நான் சிறுவனாக இருந்த காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சாதித்தது. அந்த நாடுகள், அங்கிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்து, மிகப்பெரிய பொருளாதார செலவில், பல காலம் ஆராய்ச்சி செய்தன. பின், அங்கு தண்ணீர் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். நான் வளர்ந்து, இஸ்ரோவில் பணியாற்றிய போது, நிலவை முழுவதும் ஆராயாமல் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்ற உறுதியுடன், அவர்கள் செல்லாத பகுதியான தென் துருவத்தை அடையும் வகையில், லேண்டர், ரோவரை வடிவமைத்து, அனுப்பினோம். அப்போது, பனிப்பாறை போல் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தோம்.
தற்போது, அந்த பகுதிக்கு அமெரிக்கா ஆட்களை அனுப்பும் வகையில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக ஆராய்ச்சிகளை செய்கிறது. நாமும், நிலவின் தரைப்பகுதியை ஒத்த, நாமக்கல் பகுதியில் உள்ள மலைப்பகுதியில், லேண்டரையும், ரோவரையும் இறக்கி சோதித்து வருகிறோம்.
முதலில் நிலவில் தரை இறங்குவது சாதனையாக கருதப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக, நிலவில், மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. அப்படிப்பட்ட ஆராய்ச்சிக்காக, நம் ஆதி மனிதர்களைப் போல, அங்குள்ள குகைகளில் தங்குவது, அங்குள்ள மூலப்பொருட்களை கட்டுமானப் பொருட்களாக வைத்து கட்டடம் கட்டி தங்குவது என்பது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டி உள்ளது.
அதனால், எந்த காலத்திலும், கட்டுமான பொறியியல் துறையின் தேவை உள்ளது. ஆனால், மனித தேவையை குறைத்துல, மிகவும் முன்னேறிய நிலையில், செயற்கை நுண்ணறிவு, ரோபோக்களின் துணையுடன், முப்பரிமான அச்சிடல் எனும் 3டி பிரிண்டிங் முறையில் அதை செய்ய வேண்டி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கட்டுமான தொழில் சார்ந்த வல்லுனர்கள், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில், கட்டுமானத் தொழில் அகாடமி மற்றும் வி.ஐ.டி., பல்கலைக் கழகத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பின், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:
தற்போது, துவக்கப்படும் புதிய கல்லுாரிகளில் சிவில் இன்ஜினியரிங் துறை இல்லை. ஏற்கனவே உள்ள கல்லுாரிகளிலும், இந்த துறை மூடப்படுகிறது. ஆனால், எங்கள் பல்கலைக்கழகத்தில், துவக்கத்தில் இருந்தே, சிவில், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் உள்ளன. அவற்றில், நாங்கள், பிராக்டிகல் எனும் நேரடி பயிற்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
பொதுவாக, இதுபோன்ற விழாக்களில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல செயல்பாட்டுக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், எங்கள் பல்கலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காகவே ஒரு பேராசிரியரை நியமித்துள்ளோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காலத்தின் தேவை. இதனால், இந்த துறையில், பல வல்லுனர்கள் உருவாகுவர். முக்கியமாக, கட்டடக் கழிவுகளில் இருந்து கட்டடங்களை எழுப்புவது குறித்த திறன் பயிற்சி மிகுந்த பலன் அளிக்கும். இனி வரும் காலத்தில், செயற்கை நுண்ணறிவு, இன்ஜினியரிங் துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். என்றாலும், மனித மூளைக்கு மாற்றாக அமையாது. ஆனால், மனிதன், இயந்திரங்களுடன் போட்டியிட வேண்டிய காலம் உருவாகும். அதற்கேற்ப மனிதன் தன் செயல்படும் அறிவை கூர் தீட்ட வேண்டியிருக்கும். அதற்கு, இந்த ஒப்பந்தம் துணை நிற்கும்.
இந்த கோடையில், குழந்தைகளை அழைத்துச் சென்று கல்லணையின் பொறியியல் அதிசயம், சுசீந்திரம் கோவில் இசைத்துாண்களின் விசித்திரம் உள்ளிட்ட பொறியியல் நுட்பங்களை விளக்க வேண்டும். அப்போதுதான் நம் முன்னோர்களின் அறிவாற்றலும், அவர்கள், காலம் கடந்த கட்டுமானங்களை உருவாக்கியதன் நோக்கமும் புரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கட்டுமானத்தொழில் இதழின் ஆலோசகர்களும் மூத்த பொறியியலாளர்களுமான ஏ.ஆர்.சாந்தகுமார், கமலக்கண்ணன், ராஜசேகர், மஞ்சுளா இனியன், தேவதாஸ் மனோகரன், ராதாகிருஷ்ணன், முருகேசன், கவிஞர் ஜெயபாஸ்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கிகினர். கட்டுமானத் தொழில் இதழ் ஆசிரியர் சிந்து பாஸ்கர் நன்றி கூறினார்.
‘கட்டுமானத் தொழில்’ மாத இதழ் மற்றும் ‘கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் அகாடமி’ சார்பில், கட்டுமானத் தொழில் சாதனை விருதுகள்


More Stories
FICCI roadshow showcases Chhattisgarh to outside world
Parachute Advansed Unveils Three New Products Crafted for Tamil Nadu’s Evolving Haircare Needs
The Power of the Stick: Why Bite-Sized Snacking Is Winning Over Young Consumers