சென்னை, செப்டம்பர் 28: மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் அமைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (27-09-2026) நடைபெற்ற எம்.ஆர்.எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் 4W – 2026 கார்பந்தயத்தின் இரண்டாவது சுற்றில், எம்.ஆர்.எஃப் ஃபார்முலா 2000 பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த இஷான் மாதேஷ் இந்த ரேஸிங் சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார்.

எம்.ஆர்.எஃப் ஃபார்முலா 1600 பிரிவில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த புவன் போனு மூன்று பந்தயங்களில் இரண்டில் வெற்றிவாகை சூடினார். மற்றொரு பந்தயத்தில் சென்னையைச் சேர்ந்த கியான் எஸ் முதலிடம் பெற்றார். அவரைத் தொடர்ந்து புவன் போனு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
பலல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற F2000 பந்தயத்தில் கடைசியாகப் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்ற இஷான், கடந்த மாதம் நடந்த முதல் சுற்றில் பங்கேற்கவில்லை. இந்த வார இறுதியில் நடந்த முந்தைய இரண்டு பந்தயங்களில் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையே அவரால் பிடிக்க முடிந்தது. இருப்பினும், 3-வது பந்தயத்தில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி, முதலிடம் பிடித்த அவர், புனேவைச் சேர்ந்த இளம் வீரர் சாய்ஷிவா சங்கரனின் தொடர்ச்சியான ஐந்து வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சாய்ஷிவா நேற்றைய 1-வது பந்தயத்திலும், இன்றைய 2-வது பந்தயத்திலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 3-வது பந்தயத்தில் இஷானின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெற்றியை தவறவிட்டார்.
“ஆம், இந்த வெற்றியின் மூலம் இந்த வார இறுதிப் பந்தயத்தில் முன்பு தவறவிட்ட வெற்றியையும், பெருமிதத்தையும் நான் மீட்டிருக்கிறேன். புதிய டயர்களுடன் இப்பந்தயத்தில் நான் களமிறங்கியதால், முன்பே உபயோகித்த டயர்களை திரும்பவும் பயன்படுத்திய மற்ற வீரர்களை விட எனக்குச் சிறப்பான பிடிமானம் கிடைத்தது. இதனால் என்னால் வேகத்தை அதிகரித்து, முதல் வளைவிலேயே (Turn-1) சாய்ஷிவாவை முந்திச் சென்று முன்னிலை பெற முடிந்தது. அதன் பிறகு, இந்த வெற்றியைத் தக்கவைக்கத் தேவையான வேகம் என்னிடம் இருந்தது. போதுமான பயிற்சியின்றி சனிக்கிழமை இங்கு நான் வந்தேன். எனவே இந்தக் கடைசிப் பந்தயத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த எனது செயல்திறன் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று இஷான் கூறினார்.
இதற்கிடையில், ஃபார்முலா எல்ஜிபி 1300 (ஓபன்) பிரிவில் DTS ரேசிங் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய நெல்லூரின் விஸ்வாஸ் விஜயராஜ், இந்த வார இறுதியில் நடந்த மூன்று பந்தயங்களிலும் வெற்றி பெற்று இதற்கு முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தினார். ஜூனியர் பிரிவில், பெங்களூருவைச் சேர்ந்த ஷத்வீர் ஷெட்டி 2-வது பந்தயத்தில் வென்றார். 3-வது பந்தயத்தில் கொழும்பைச் சேர்ந்த இலங்கை வீரர்களான ஆதம் ஜுனைத், கவீன் தியன் ராஜபக்ச மற்றும் சௌரிகா லிவிந்து ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்று மொமெண்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்கு வெற்றி மகுடம் சூட்டினர்.
திருமணம் மற்றும் தாய்மை காரணமாக ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய சென்னையைச் சேர்ந்த அலிஷா அப்துல்லா, எம்.ஆர்.எஃப் சலூன்ஸ் (டொயோட்டா எட்டியோஸ்) பிரிவில் ஒரு வெற்றி உட்பட இரண்டு முறை முதல் மூன்று இடங்களுக்குள் வந்து தனது கம்பீரமான வருகையைப் பதிவு செய்தார். ஆனால், விதிமீறல் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது வெற்றி பறிக்கப்பட்டது. இதையடுத்து, முந்தைய பந்தயத்தில் வெற்றி பெற்ற புதுச்சேரியின் ஹேமச்சந்திரன் ஆர், முதலிடத்திற்கு (P1) முன்னேறி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார். முன்னதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ். கோகுல ரத்தினம் முதல் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
ஃபோக்ஸ்வேகன் போலோ கோப்பைக்கான போட்டியில், மும்பையின் பிரதீக் சோனவானே மூன்று பந்தயங்களில் இரண்டில் வெற்றி பெற்றார்; நொய்டாவைச் சேர்ந்த அமன் நாக்தேவ் மற்றொரு பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். சூப்பர் ஸ்டாக் பிரிவில், திருச்சூரைச் சேர்ந்த தில்ஜித் டி.எஸ் மற்றும் டிடிஎஸ் ரேசிங் அணியில் அவரது சக வீரரான லால் கட்டிகுளம் பரதன் ஆகியோர் தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர்.


More Stories
IGBC Green Tamil Nadu Summit 2026 brings government and industry together to strengthen collaboration on green buildings
A First-of-Its-Kind in India: MMA’s 24-Hour Non-Stop Management Carnival Inaugurated Today – 70 Skills, 70 Themes
HomeLane Strengthens Chennai Presence with New Experience Centre in Sembakkam-Tambaram