எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமாக இயங்கும் விபத்துக் காயங்களுக்கான அறுவைசிகிச்சை குழு, இம்மருத்துவமனையில் முதன் முறையாக தனது ‘விலா எலும்பு நிலைநிறுத்தல்‘ அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தி ஒரு புதிய சாதனை படைத்திருக்கிறது. விபத்து காயங்களுக்கு மேம்பட்ட, நவீன சிகிச்சை அளித்து குணமாக்குவதில் இம்மையத்தின் திறனுக்கு சான்றாக இது திகழ்கிறது.
சாலை விபத்து ஒன்றில் சிக்கிய நோயாளி ஒருவருக்கு விலா எலும்புகள் பல இடங்களில் உடைந்திருந்தன. ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான வலி நிவாரண சிகிச்சைகளும், இயன்முறை சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்து கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். எலும்புகள் சரியாக இணையாததாலும், முறிந்த விலா எலும்புகளின் நிலையற்ற தன்மையாலும், ஆழமாக சுவாசிப்பதில் சிரமம், சரியாக தூங்க இயலாமை மற்றும் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாத நிலை அவருக்கு நீடித்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பொது அறுவை சிகிச்சைத் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் விஜயன் P தலைமையிலான குழுவினர், முறிவுகள் ஏற்பட்டிருந்த விலா எலும்புகளை மீண்டும் சீரமைத்து நிலைநிறுத்தும் சிறப்பு அறுவை சிகிச்சையை இவருக்குமேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, இந்நோயாளி வலி குறைந்து, இயல்பாக சுவாசிக்கத் தொடங்கினார். மிக விரைவாகக் குணமடைந்த அவரால் மீண்டும் தன்னம்பிக்கையோடு இயல்பான பணிகளுக்கு இப்போது திரும்புவது சாத்தியமாகியிருக்கிறது.
பொது அறுவை சிகிச்சைத் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் விஜயன் P. இந்த சிகிச்சை செயல்முறை பற்றி பேசுகையில், “விலா எலும்புகள் வலுவின்றி நீண்ட காலம் நிலையற்று இருப்பது, சுவாசத்தையும் மற்றும் உடல் இயக்கத்தையும் ஒட்டுமொத்த நலத்தையும் கடுமையாக பாதிக்கும். விலா எலும்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் நிலைப்படுத்தியதால், அவருக்கு வலியைக் குறைத்து, நுரையீரலின் செயல்பாட்டை எங்களால் மேம்படுத்த முடிந்தது. பொதுவான சிகிச்சைகள் பலன் தராதபோது, இதுபோன்ற பயனளிக்கும் நவீன அறுவைசிகிச்சைகளின் முக்கியத்துவத்தை இந்த சிகிச்சை முறையின் வெற்றி உணர்த்துகிறது.” என்றார்.
எஸ்ஆர்எம் பல்கலையின் இணை துணை வேந்தர் டாக்டர் நிதின் M. நாகர்கர் பேசுகையில், “இந்த நவீன சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய மருத்துவக் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன். இம்மாநகரில் இத்தகைய அறுவைசிகிச்சை செயல்முறைகள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே செய்யப்பட்டிருக்கின்றன. எமது மருத்துவமனையில், முதன் முறையாக செய்யப்பட்டிருக்கும் விலா எலும்பு நிலைப்படுத்தல் அறுவைசிகிச்சையின் வெற்றி எஸ்ஆர்எம் மருத்துவமனையின் மருத்துவ மேன்மைக்கும், நோயாளிகள் நலனில் கொண்டுள்ள அக்கறைக்கும் சான்றாகும். உலகத்தரம் வாய்ந்த அவசர கால சிகிச்சைகளை வழங்குவதில் எமது அர்ப்பணிப்பு இனியும், வலுவாகத் தொடரும்.” என்று கூறினார்.


More Stories
Vedantu Students from Tamil Nadu Deliver Historic NEET UG 2026 Results with 360+ Selections Across the State
Rajalakshmi Engineering College Creates World Record at AI NEXUS 2026 TN AI Minister Applauds Historic Student Achievement
நீட் யுஜி 2026 தேர்வில் அகில இந்தியதரவரிசை (AIR) 92-ஐப் பெற்று ஈரோடு நகரஅளவில் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ்லிமிடெட்