June 6, 2026

இந்தியாவின் 11,000 கி.மீ கடற்கரை நெடுகிலும் உடனடி பருவநிலை அபாயங்கள் குறித்து புதிய அறிக்கை

1960-களின் அடிப்படைத் தரவுடன் ஒப்பிடுகையில், 2021-2040 காலப்பகுதிக்கிடையில் மாவட்ட அளவிலான காலநிலை மாற்றங்களைப் புலப்படுத்த உயர்தர 25 × 25 கி.மீ தரவுகளை இது பயன்படுத்துகிறது.

சென்னை, ஜூன் 5, 2026: பெங்களூருவில் உள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘-Indian Coastal Region: Climate Projections 20212040 அறிக்கையின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், மற்றும் சூழலியல் அமைப்புகளை மாற்றியமைக்கும் அளவிற்கு உடனடி பருவநிலை நெருக்கடியை இந்தியாவின் கடலோர பகுதிகள் எதிர்கொள்கின்றன.

குறுகிய கால கணிப்புகளில் (2021-2040) கவனம் செலுத்தும் இந்த ஆய்வு, கொள்கை வகுப்பாளர்களுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இதற்காக துல்லியத்தை மேம்படுத்த பிராந்திய சார்புக்காக சரிசெய்யப்பட்ட CMPI6* மாதிரி கணிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவின் நிர்வாகப் பகுதிகள் முழுவதும் வெப்பமயமாதல் வரம்பு 1.5 டிகிரி செல்சியஸ் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தகவமைப்புக்கான சாளரம் விரைவாக குறைந்து வருவதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

“பருவநிலை மாற்றம் என்பது எதிர்கால சவால் அல்ல- இது இன்றைய யதார்த்தம். 2040 வெறும் 14 ஆண்டுகள் தொலைவில் உள்ளது,” என்று ஆசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி அனுராக் பெஹர் கூறினார். “இந்தத் தரவுத் தொகுப்பு பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை வெளிப்படுத்தி, இந்த நெருக்கடியை நாம் ஒன்று சேர்ந்து எதிர்கொள்வதை உறுதிசெய்ய நமது உள்கட்டமைப்பு மற்றும் ஆட்சி முறையை எவ்வாறு மறுசீரமைப்பு செய்வதன் அவசியத்தைக் காட்டுகிறது.

கேரளத்தில் அதிகரித்து வரும் ஈரப்பத வெப்பநிலை முதல் மஹாராஷ்டிராவில் வலுப்பெற்று வரும் பருவமழைகள் வரையிலான குறிப்பிடத்தக்க மாற்றங்கள், நகைஹ் காற்று நாட்காட்டி போன்ற பாரம்பரிய அமைப்புகளை எவ்வாறு நம்பகத்தன்மையற்றதாக ஆக்கி வருகின்றன என்பதை இந்த அறிக்கை ஆராய்கிறது. மாவட்ட அளவிலான மீள்திறனைக் கட்டமைப்பதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவதே இந்த ஆய்வறிக்கையின் நோக்கம்.

“இந்த அறிக்கையில் உள்ள தரவுகள், நாம் இனியும் புறக்கணிக்க முடியாத ஓர் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி ஆகும். பல தசாப்தங்களாக, பருவநிலை மாற்றத்தை நாம் ஒரு உலகளாவிய கற்பனையாக – அதாவது, துருவப் பனிப்பாறைகள் மற்றும் பின்வரும் நூற்றாண்டுகளின் ஒரு பிரச்சனையாகவே கருதி வந்தோம். ஆனால், இந்தியக் கடற்கரைப் பகுதிகளைப் பொறுத்தவரை, இந்த நெருக்கடியானது மிகவும் உள்ளூர் சார்ந்ததாகவும் உடனடியானதாகவும் இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. எர்ணாகுளத்தில் நிலவும் வெப்ப அழுத்தமாக இருந்தாலும் சரி, சுந்தரவனத்தில் அதிகரித்து வரும் உப்புத்தன்மையாக இருந்தாலும் சரி, நமது அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நமது பலவீனம் வெளிப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் தணிப்பு நடவடிக்கைகளிலிருந்து, முன்கூட்டியே தகவமைப்புக்கு மாறுவதற்கு நமக்குக் குறுகிய கால அவகாசமே உள்ளது – நமது நாடு எதிர்கொள்ளும் சூழலியல் சவால்களை அங்கீகரிக்கும் ஒரு எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.” என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை பள்ளியின் இயக்குநர், ஹரினி நாகேந்திரா கூறினார்.

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுசூழல் மாற்றக் காலத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. சென்னையில் அதிகபட்ச கோடைகால வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது வெப்பத்தைக் தாங்கக்கூடிய நகர்ப்புற திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த வெப்பமடைதலுடன் பருவகால மழையிலும் குறிபிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது; சென்னையில் தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நாகபட்டினமும் தனது முக்கியமான வடகிழக்கு பருவமழையில் 20 சதவிகித அதிகரிப்பை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்த மாற்றங்கள் ஏற்கனவே கடலோர சமூகங்களின் வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன; இராமேஸ்வரத்தில், மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் ‘எட்டு திசைக் காற்றுகள்’ பற்றிய பாரம்பரிய அறிவு, அதிகரித்து வரும் கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களால் சவாலுக்கு உள்ளாகி வருகிறது; அதே நேரத்தில், தூத்துக்குடியில் கடல் நீரின் வெப்பநிலை உயர்வால், கடற்பாசி தொழில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. 2040-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், மாநிலத்தின் செழிப்பான கடலோர பொருளாதாரத்தையும் பல்வகை உயிரியல் அமைப்புகளையும் பாதுகாக்க தேவையான நுணுக்கமான தரவுகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

முக்கிய கண்டறிதல்கள்: அதிகரிக்கும் வெப்பநிலை: இந்தியாவின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும், சுமார் நாற்பது கடலோர மாவட்டங்களில் கோடை கால வெப்பநிலையானது 1 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

● அபாயகரமான ஈரப்பத வெப்பநிலை: கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கோடை காலத்தில் அதிகமான ஈரப்பத வெப்பநிலை நிலவும். இது மனிதர்களுக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் 31°C அளவை நெருங்கும்.
● எர்ணாகுளம் – வெப்ப அலை அதிகரிப்பு: அதிகபட்ச கோடை வெப்பநிலை எர்ணாகுளம் மாவட்டத்தில் பதிவாகும் என்றும் அது மற்ற கடலோர மாவட்டங்களை விடவும் 1.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
● வலுவடைந்த மேற்கு கடற்கரை பருவமழை: மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் கடலோர பகுதிகளில் மழைப்பொழிவு கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு கூடுதலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
● சூரத்தில் அதிகரிக்கும் பருவமழை: வரலாற்று அளவுகளுடன் ஒப்பிடுகையில், சூரத்தில் தென்மேற்குப் பருவமழை கணிசமாக 23% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
● கடல் மட்ட உயர்வு மற்றும் கடலரிப்பு: மிதமான மாசு வெளியேற்ற சூழ்நிலைகளின் (SSP2-4.5)** கீழ், 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கடல் மட்டம் 15 செ.மீ. உயர வாய்ப்புள்ளது. இது கரையோர அரிப்பை வேகப்படுத்தி, ஒடிசாவில் கஞ்சம் போன்ற பகுதிகளில் பேய் கிராமங்கள் உருவாகும் நிலையை ஏற்படுத்தலாம்.
● சுழல்காற்று அபாயம்: வேகமாக உயர்ந்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (பத்தாண்டுகளுக்கு 0.27 டிகிரி செல்சியஸ்) , தீவிர வெப்பமண்டல சுழல்காற்று உருவாகும் வாய்ப்பை அதிகரித்து வருகிறது.
● பாரம்பரிய வாழ்வாதாரங்களின் தாக்கம்: கோவாவில், பருவத்திற்கு மாறாக பெய்யும் மழையானது சில மணி நேரங்களிலேயே உப்பு அறுவடையை முற்றிலும் அழித்துவிடுகிறது; அதே நேரத்தில்,கடல் வெப்பமயமாதல் மீன்களை மேலும் ஆழ்கடலுக்கு தள்ளுவதால், சிறு மீனவர்களுக்கு “வெற்று வலைகளே” கிடைக்கின்றன.
● ஆரோக்கியம் மற்றும் உப்புத்தன்மை: சுந்தரவனத்தில் அடிக்கடி கரைகள் உடைவதால் உயரும் உப்புத்தன்மையின் தாக்கம் தோல் நோய்கள் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார சவால்களுடன் தொடர்புடையதாக உள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பற்றி:
பெங்களுருவில் அமைந்துள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் கர்நாடக அரசின் ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்டம், 2010-இன் கீழ் நிறுவப்பட்டது. போபாலில் அமைந்துள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகமானது மத்திய பிரதேச மாநிலத்தின் நிஜி விஸ்வ வித்யாலயா (ஸ்தாபன ஏவம் சஞ்சலன்) த்விதிய சன்ஷோதன் ஆதினியம், 2022 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் நிறுவப்பட்டது. ராஞ்சியில் உள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஜார்கண்ட் அரசால் இயற்றப்பட்ட ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக சட்டம், 2022-இன் அடிப்படையில் நிறுவப்பட்டு வருகிறது.

ஆதரவு அமைப்பான ஆசிம் பிரேம்ஜி அறக்கட்டளை, இந்த மூன்று பல்கலைக்கழகங்களையும் முழுமையான தொண்டு நிறுவனங்களாக நிறுவியுள்ளது. இவை மூன்றும் நியாயமான, சமத்துவமான, மனிதநேயமிக்க மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்குவதற்கான தெளிவான சமூக நோக்கத்துடன் செயல்படுகின்றன.

தொகுப்பாளர்களுக்கான குறிப்பு
*CMIP6 (காலநிலை மாதிரிப்படுத்தல் – Climate Modeling)
CMIP6 என்பது காலநிலை முன்னறிவிப்பிற்கான சமீபத்திய உலகளாவிய கட்டமைப்பாகும். இது உலகம் முழுவதிலுமுள்ள 30-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வகங்களில் தரவுகளை ஒருங்கிணைத்து, உலகின் மிகத் துல்லியமான காலநிலை மாதிரிகளை உருவாக்கிறது. இதன்மூலம் விஞ்ஞானிகள், குறிப்பிட்ட மாவட்டங்களின் காலநிலை மாற்றங்களை முன்பைவிட அதிக தீர்மானத் துல்லியத்துடன் விரிவாக ஆய்வு செய்ய முடிகிறது.

**SSP2-4.5:
SSP2-4.5 என்பது “நடுத்தர பாதை” (Middle of the Road) எனப்படும் காலநிலை முன்னறிவிப்பு நிகழ்வுருவாகும். உலகின் தற்போதைய வளர்ச்சி மற்றும் கார்பன் வெளியேற்றமும் பெரிய மாற்றங்கள் இன்றி தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், இந்தியாவின் கடலோரப் பகுதிகள் எதிர்கொள்ளும் உடனடி அபாயங்களை உண்மைத் தன்மையுடன் காட்டுவதற்கான அடிப்படை முன்னறிவிப்பாக இது பயன்படுத்தப்படுகிறது.

ஊடக கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
சோனி ஷெட்டி (Sony Shetty)
மின்னஞ்சல்: sony.shetty@azimpremjifoundation.org sony.shetty@azimpremjifoundation.org கைப்பேசி எண்: +919820900036

About Author